புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் எடுத்த முடிவின்படி இந்து முன்னணியினர் பந்த் நடத்துவதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியின் இன்றைய அரசியல் நிலைகுறித்து விவாதிப்பதற்கு மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா, இந்த ஆட்சியில் மோசமான அரசியல் ஜனநாயகம் உள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல், இந்த ஆட்சியில் முதல்வர் நியமனம் முதல் அமைச்சர், சபாநாயகர், புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் நியமிக்கப்படுவது வரை ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் அனுமதி பெற்று பெண்களோடு, குழந்தைகளோடு முறையான போராட்டம் நடத்தியது. அப்போது போலீஸ் முன்னிலையில் ரவுடிக்கும்பல் புகுந்து தாக்கியுள்ளது. மேலும் ஆட்சி, அதிகாரிகள் துணையோடு வில்லியனூர், முத்தியால்பேட்டை நடந்த பொதுக்கூட்டத்திலும் தகராறு செய்கின்றனர்.
திமுகவாக இருந்தாலும், திராவிடர் கழகமாக இருந்தாலும் 50, 60 ஆண்டுகாலமாக பேசி வருகின்றது. நீங்கள் செய்துள்ள மோசடியை சுட்டி காட்டுகின்றோம். எழுதியதை படித்து காண்பிக்கின்றோம். தமிழகத்தில்தானே ராஜா இருக்கின்றார். உங்கள் மத்திய அமைச்சர்கள் இருக்கின்றனர். தைரியம் இருந்தால் தமிழகத்தில் போராட்டம் நடத்த வேண்டியதுதானே. அங்கு சுளுக்கு எடுப்பார்கள். ஏமாந்த ரங்கசாமியிடம் போராட்டம் நடத்துகின்றீர்கள். மேலும் புதுச்சேரி மக்கள் யார் பந்த் அறிவித்தாலும் வேடிக்கை பார்ப்பார்கள்.
பந்த் அறிவிப்பில் 10 பேர் இருப்பார்கள். எங்கிருந்து யாரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். சபாநாயகர் வேலை, கடமை, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளது. எந்த கட்சி சார்பில் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இலைமறை காயாக அந்த கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் பாஜக அலுவலகமாக ராஜ்நிவாஸை மாற்றியவர் தமிழிசைதான். ஒரு எம்.எல்.ஏ., உண்ணாவிரதம இருந்தார். அவர் முறையாக சபாநாயகரிடம்தான் பேச வேண்டும். அவர்தான் தீர்த்து வைப்பார். ஆனால் ஆளுநர் உள்ள பாஜக அலுவலகத்திற்கு அழைத்து செல்கின்றனர். மக்கள் விரோத செயல்களை மறக்கடிக்க இதுபோல் செய்கின்றனர்.
நான் கொடுக்கும் அறிக்கைக்கு பாஜக, என்.ஆர்.காங்கிரஸில் இருந்து பதில் தருவதில்லை. ஓட்ட, ரப்பர் வாய் பதில் தருகிறார். ஆனால் அவருக்கு அந்த வேலையே கிடையாது. நான் கொடுத்த அறிக்கைக்கு பதில் மட்டுமே கூறுகின்றார். கடந்த ஆட்சியில் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புகின்றார். ரேஷன் கடை மூட நான் என்னவோ அமைச்சரவையில் இருந்து கையெழுத்து போட்டதைப்போல் கூறுகின்றார். அப்போதும் பாஜகதானே ஆட்சியை நடத்தியது. ஆனாலும் கூட 2019 வரை அரிசி போடப்பட்டது. நாங்கள் அரிசி வழங்குகின்றோம் என்று கூறித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள். அதன்படி போட வேண்டியதுதானே. எனக்கு பதில் தருபவர் ரேஷன் கடைகளை திறந்து அரிசி போட வேண்டும் என்கிறாரா? வேண்டாம் என்கிறாரா?
புதுச்சேரி அரசின் உதவியாளர் பதவிக்கான தேர்வில் இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 5 ஆண்டு புதுச்சேரியில் தங்கியிருக்க வேண்டும் என்றும் இல்லை. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி அந்தமான் தீவுகளைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்க கூடுதலாக 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இவர் குரல் கொடுப்பது யாரை ஏமாற்ற? இதனால் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது, இட ஒதுக்கீடு கொள்கையும் முழுக்க அடிபடுகிறது. எதிர்கட்சி தலைவருக்கு ஒன்றும் தெரியாது, ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துகிறார் என்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தி பிழைப்பு நடத்துபவரே அவர்தான். ரேஷன் கடை திறக்க வேண்டுமா? மூட வேண்டுமா? அவரது கொள்கை என்ன. மின்துறை தனியார் மயமாக்கினால் லாபம் என்று சொல்லவாரா? 25 ஆயிரம் கோடி சொத்தை ரூ.700 கோடி என குறைச்சலாக மதிப்பிட்டு, அதானி, அம்பானிக்கு கொடுக்க உள்ளனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை மூடப்பட்டது, பாண்லே ஊழல் கண்ணுக்கு தெரியாத ஊழலாகிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில், அரிசி மொச்சைக்கொட்டை அளவில் உள்ளது. இதனால் மாணவர்கள் உணவை சாப்பிடாமல் கீழே கொட்டுகின்றனர். இதைப்பற்றி பேசுவதில்லை. 4 மாதமாக மாணவர்களுக்கு முட்டை போடவில்லை. கொரோனா காலத்திற்கு உணவு வழங்காததற்கு மாணவர்களுக்கு பணம் போட்டதைப்போல், நான்கு மாத காலத்திற்கு முட்டை போடாததற்கு வாரத்திற்கு 2 முட்டை என்றால் மாதத்திற்கு 8 முட்டை என கணக்கிட்டு 4 மாதத்திற்கு பணம் தருவீர்களா? மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என எதுவும் தரவில்லை.
குடிசை மாற்று ஊழியர்கள் சம்பளம் கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சுமார்ட் சிட்டி திட்டப்பணியை அவர்களிடம் கொடுக்கலாம். அவர்களிடம் கொடுத்தால் தவறு நடக்காது என்பதால் தவறு நடக்கக்கூடிய பொதுப்பணித்துறையிடம் சுமார்ட் சிட்டி திட்டப்பணியை கொடுத்துள்ளனர். ஆளுநர், தலைமை செயலர், நிதி செயலர், முடிவு செய்யும் நிலை உள்ளது. மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை ஜிப்மரில் அனுமதிக்கின்றார்களா? ஆளுநர் முடிவு செய்து இந்த பந்த்தை நடத்துகின்றனர். மக்களை சந்தித்து வாக்குகளை கொடுத்து அரசியல் செய்யும் கட்சி நாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரம் தற்போதுதான் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்று வருகிறது. பந்த் அறிவித்தால் வியாபாரம் பாதிக்கும். எனவே பந்த் போராட்டம் சரியாக படவில்லை. நீங்கள் எடுக்கும் முடிவிற்கு திமுக ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக