புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சொந்தமான, தற்போது அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருக்கின்ற,அரசாங்க சொத்துக்களின் உரிமைகளை இப்போது துணைநிலை ஆளுநருக்கு மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டிலே தற்போது இருக்கிறது இந்த உரிமைகள்.
இதை மத்திய அரசு மோடி அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, துணைநிலை ஆளுநருக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கிறது.
இதன் மூலம் புதுச்சேரி அரசாங்கத்துக்கு சொந்தமாக இருக்கின்ற பல ஏக்கர் நிலங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்க முடிவெடுத்து விட்டார்கள்.
அதன்படி காலாப்பட்டில் உள்ள அசோகா கெஸ்ட் ஹவுஸ் மனை, சேதுராப்பட்டிலுள்ள தொழில் வளர்ச்சிக்கு உகந்த நிலங்கள், துறைமுகத்தை சுற்றியுள்ள அரசாங்க நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் & இதேபோல் எந்த பகுதியிலும் இருக்கின்ற (காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியில் இருந்தாலும்கூட) அத்தனையுமே மத்திய மோடி அரசின் ஏஜெண்டாக இருக்கிற துணைநிலை ஆளுநர் எடுக்கின்ற முடிவு படி என்று வந்துவிடும்.
இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு மோடி அரசு புதுவை மாநிலத்தை தனது சொந்த வீடு போல மாற்றிக் கொள்ளும்.
சுற்றுப்புற சூழல் அப்படியே இன்னும் கெட்டுவிடும்.
இதைக் கேட்டால் NR காங்கிரஸ்-கூட்டணி ஆட்சி, BJP ஆட்சியாக மாறிவிடும். BJP கொடூர முகம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த 8 ஆண்டுகளிலேயே இவ்வளவு ஆட்டம் போடுகின்ற பிஜேபி இன்னும் கொஞ்சம் காலம் விட்டு வைத்தால் இந்தியாவை கூறு போட்டு கார்ப்பரேட்டுகளிடம் விட்டுவிட்டு, கமிஷன் வாங்கிக் கொண்டு இந்த நாட்டை விட்டே ஓடி விடுவார்கள்.
தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும், இறக்குமதி செய்யக்கூடாத பொருள்கள் இந்த துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும், ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ள பொருட்கள் தாராளமாக வரி ஏய்ப்போடு ஏற்றுமதி செய்யப்படும். இதுதான் கார்ப்பரேட் கொள்ளைக்காரர்கள் செய்யும் வேலை.
தூத்துக்குடியில் தடை செய்யப்படும் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை உரிமையாளர்கள் மோடி மற்றும் பிஜேபிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். எனவே அந்த தொழிற்சாலை கூட இந்த மாநிலத்தில் அனுமதி கொடுத்து திறக்கப்படலாம். இதனால் பெரிய அளவில் சுற்றுப்புற சூழல் புதுச்சேரி மாநிலத்தில் பாதிக்கும் நிலை உருவாகும்.
பல ஆயிரம் கோடி சொத்து உள்ள மின் துறையின் மின் வினியோகத்தை தனியாருக்கு கொடுப்பதைப் போல், இன்னும் எதையெல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. அதற்குள் மத்தியில் இருக்கின்ற மோடி ஆட்சி விழுந்தால் மட்டுமே இந்த நாட்டிற்கு விமோசனம்.
மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அரசாங்கம் விரும்பி சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்காவது ஏழைகளுக்கு பட்டா கொடுக்க விரும்பினால் கூட துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த முயற்சியை, ஒருமித்த கருத்துடைய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள, புதுவை மக்கள் மீது பற்றுடைய அனைத்துக் கட்சிகளும் (அது அதிமுக வாக இருந்தாலும் கூட) சேர்ந்து போராடி தடுக்க வேண்டும்.
முதலில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக