புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ், பாரதீயஜனதா, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிமுக தொண்டர்களின் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பின் காரணமாக என்ஆர்.காங்கிரஸ், பாஜக 16 இடங்களில் வெற்றி பெற்றது. என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டை கடந்த நிலையிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறதா? என்பது கேள்விக்குரியதாக உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அதிமுக நிர்வாகிகள் கூட்டணி முதலமைச்சரை நேரடியாக சந்தித்து, வாரிய தலைவர்கள் மற்றும் கட்சியினருக்கு பொறுப்புகள் வழங்கும்படி வலியுறுத்தி வந்தனர். கூட்டணி முதலமைச்சர் ஓராண்டுக்கும் மேலாக இந்த கோரிக்கை குறித்து செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் வக்பு வாரியத்திற்கு மட்டும் நேற்றைய தினம் (21.6.2022) தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.நாஜிம் உட்பட 3 திமுகவினர், என்ஆர்.காங்கிரசை சேர்ந்த ஒருவர் என 4 பேரை உறுப்பினர்களாக நியமித்துள்ளனர்.
இச்சூழலில் கடந்த கால நிகழ்வுகள் குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். புதுச்சேரியில் 2016-2021ல் நடந்த மதச்சார்பற்ற கூட்டணி காங்கிரஸ்- திமுக ஆட்சியின்போது இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் அதிமுக சட்டமன்ற உறப்பினராக இருந்தார். வக்பு வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடம்பெற வேண்டும் என விதி இருந்தது.
ஆனால் அப்போதைய மதச்சார்பற்ற கூட்டணி முதலமைச்சர், கூட்டணி தர்மத்தை மீறி நாங்கள் செயல்பட முடியாது எனக்கூறி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த, அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு சட்டத்தை மீறி வக்புவாரிய உறுப்பினர் பதவி வழங்கவில்லை, 5 ஆண்டுகளும் அரசு அதிகாரியை கொண்டே வக்பு வாரியத்தை நடத்தினர்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலமைச்சர், அதிமுகவின் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேரை வக்புவாரிய உறுப்பினராக நியமித்துள்ளது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு, புதுச்சேரி அரசியலை நன்கு உணர்ந்த மேதகு துணை நிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரர்ராஜன் வக்பு வாரிய உறுப்பினர்களை நியமிக்க பரிந்துரை செய்ததும், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தர்மத்தை காப்பீர்கள் என நம்புகிறேன என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக