புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசிடம் இருக்கும் நில உரிமை அதிகாரம் மாநில அரசுக்கு தேவை என அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் மாண்புமிகு என்.ஆர். அவர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் வந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சீராய்வு கூட்டத்தில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது. இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சகட்டு மேனிக்கு முதல்வரையும், துணை நிலை ஆளுநரையும் விமர்சனம் செய்துள்ளனர். அதேபோன்று புதுச்சேரியில் உள்ள சில அரசியல் அறிஞர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
தற்போதுள்ள நில உரிமை அதிகாரப்படி நம் அரசுக்கு 19 ஆண்டுகளுக்கு அதிகமாக கூடுதலாக ஒரு நாளாவது தனியாருக்கு குத்தகை விடும் உரிமை இருக்கிறதா? அதேபோன்று, 100 சதுர அடி அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அதிகாரம் உள்ளதா? இது சம்பந்தமான முழு அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது.
நம் அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தை மாநில வளர்ச்சிக்காக தனியாரிடம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை விடுவதற்கோ, விற்பனை செய்வதற்கோ தற்போது மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை மாநில அரசுக்கு தேவை என மாநில நலன் கருதி எங்கள் முதலமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இதில் அரசு என்றால் முதல்வரையும், துணைநிலை ஆளுநரையும் இணைந்தே குறிக்கும்.
1963-ஆம் ஆண்டு யூனியன் ஆட்சிப் பரப்புகள் அரசாங்க சட்டத்தின் படி ஆட்சியாளர் என்பது இந்திய அரசயில் அமைப்பின் 239-வது விதிமுறையின் கீழ் இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநர் என்பவர் புதுச்சேரி யூனியன் ஆட்சிப் பரப்பின் ஆட்சியாளர் ஆவார். நிர்வாக அடிப்படையில் அரசு என்றால் முதல்வர், துணைநிலை ஆளுநர், அமைச்சரவை உள்ளடக்கியதை குறிக்கும்.
நம் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து இல்லாத நிலையில் சட்டப்படி மாநில அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். போதாகுறைக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று கடந்த திமுக, காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த திரு. நாராயணசாமி அவர்கள் துணை நிலை ஆளுநருக்கு முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொடுத்தார். முன்னாள் முதலமைச்சர் திரு. நாராயணசாமியின் தவறான அணுகுமுறையால் முன்னாள் துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடியால் பறிக்கப்பட்ட பல்வேறு மாநில உரிமைகளை நமது மாநில முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் ஒவ்வொன்றாக பெற்று வருகிறார். துணை நிலை ஆளுநருடன் இணைந்து
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாண்புமிகு முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும், அடிமையாக இருக்கின்றார் என கூறுவதும், அதே முதலமைச்சருக்கு ஆதரவாக பேசுவதாக நடிப்பதும், தேவையற்ற ஒன்றாகும். மாண்புமிகு முதல்வரின் தன்மானத்தைப் பற்றி பேசும் முன்னாள் முதல்வர் திரு. நாராயணசாமி அவர்கள் அரசு விழாவில் முன்னாள் துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி அவர்களுக்கு மொழிப் பெயர்ப்பாளராக துபாஷ் வேலையை, தான் முதலமைச்சர் என்பதை மறந்து அடிமைத்தனமாக மொழி பெயர்த்தது ஏன்?
ஒரு அரசு விழாவில் மக்கள் பிரதிநிதியாக என்னை அவமதித்த திருமதி கிரண்பேடியை அதே மேடையிலேயே நான் எதிர்த்தபோது துணை நிலை ஆளுநரை கண்டிக்காமல், என்னை கண்டித்து திரு. நாராயணசாமி ஏன் அறிக்கை வெளியிட்டார்? தனக்கு தேவைபடும்போது துணைநிலை ஆளுநரின் காலில் விழுந்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு எங்கள் முதலமைச்சரைப் பற்றியோ, துணை நிலை ஆளுநரைப் பற்றியோ விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை. புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் அன்றைய நிகழ்வில் துணை நிலை ஆளுநரை கண்டித்து அதிமுகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
இந்த பிரச்சனையில் அரசியல் முதிர்ச்சி இல்லாமல், உண்மை நிலை உணராமல் திமுக மாநில அமைப்பாளர், எதிர்கட்சி தலைவர் உளறியுள்ளார் என நான் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருந்தேன். அதற்கு திமுகவைச் சேர்ந்த சிறுபிள்ளைத்தனமான இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து எதிர்கட்சி தலைவர் பதிலளித் துள்ளார், முதலில் திமுகவில் உள்ள எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் யூனியன் பிரதேசம் என்றால் என்ன? ஆட்சியாளர் என்றால் என்ன? அரசு என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன? அமைச்சரவை என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு அரசில் கொள்கை துணைநிலை ஆளுநரால் எடுக்க முடியாது, அரசின் கொள்கை முடிவு என்பது அமைச்சரவையால் மட்டுமே எடுக்க முடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்களும் புரிந்து கொண்டு அறிக்கை வெளியிடுவது நல்லது.
முன்னாள் துணைநிலை ஆளுநரை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் விழுந்து நமஸ்கார போராட்டம் நடத்தியபோது நான் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேனா என திமுகவினர் கூறியுள்ளனர். அதே துணைநிலை ஆளுநரை நாங்கள் எதிர்த்தபோது எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர் வாயில் சுவிங்கம் சாப்பிட்டு கொண்டிருந்தார்களா? இவையெல்லாம் என்னை விமர்சித்த திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் திமுகவில் உறுப்பினராக கூட இருந்ததில்லை. அற்ப சுயநலத்திற்காக தங்களது உண்மை அடையாளங்களை மறைத்து அவ்வப்போது கட்சி மாறி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் இன்னும் திருந்தாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக