புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதாவது:
சமீபத்தில் புதுவைக்கு வருகைதந்த மத்திய உள்துறை அமைச்சரிடம் புதுச்சேரி மாநில நலன் சம்பந்தமாக மாண்புமிகு முதல்வர் அளித்த கோரிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சீராய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மனிதவள அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநில அரசுக்கு தேவையான நிதி உதவிகள், மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவிகித மத்திய நிதி உதவி, தற்போது மத்திய அரசிடம் உள்ள அரசு நிலம் விற்பனை அதிகாரம், அரசு நிலம் குத்தகை அதிகாரங்கள் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
இது என்ன பிரச்சனை என்று கூட தெரிந்து கொள்ளாமல் சரியான புரிதல் இல்லாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் நில அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு வழங்கினால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் எதிர்க்கட்சித்தலைவர் சிவா அவர்கள் அறிவித்துள்ளார்.
1973 க்கு பிறகு நில விற்பனை அதிகாரம் முழுக்க, முழுக்க மத்திய அரசிடம் உள்ளது. அதேபோன்று அரசு நிலம் 19 வருடத்துக்கு மட்டுமே மாநில அரசால் குத்தகைக்கு விட முடியும். இங்கு மாநில அரசு என்றால் 1963 ன் படி சட்டப்படி துணைநிலை ஆளுநர் அதாவது தலைமை நிர்வாகி என பொருள் கொள்ளவேண்டும்.
நம்மைப் போன்று உள்ள யூனியன் பிரதேசமான டெல்லியில் உள்ளது போன்று அரசு நில விற்பனை அதிகாரமும், அரசு நிலத்தை 99 ஆண்டிற்கு குத்தகை விடும் அதிகாரமும் மாநில அரசுக்கு தேவையான மாண்புமிகு முதல்வர் திரு ரங்கசாமி அவர்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அது சம்பந்தமான சீராய்வு கூட்டத்திற்கு ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தது. 1973 இல் இருந்து மத்திய அரசிடம் உள்ள அரசு நில விற்பனை குத்தகை விடும் அதிகாரத்தை நமது முதல்வர் மாநில அரசுக்கு கேட்கிறார். இந்த அதிகாரம் ஏதோ மாநில அரசிடம் உள்ளது போன்றும் அதை மத்திய அரசு எடுத்து துணைநிலை ஆளுநர் இடம் ஒப்படைப்பது போன்றும் தவறான கருத்தை திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மத்தியில் தனது அறியாமையால் பரப்பி உள்ளது. உதாரணத்திற்கு ஏஎப்டிக்கு சொந்தமான பட்டானூர் நிலம் பஞ்சாலை ஊழியர்கள் நலன் காக்க அந்த மில்லுக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்ய கடந்த திமுக, காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. அந்த நிலம் இன்றுவரை நமக்கு அதிகாரம் இல்லாததால் விற்பனை செய்ய முடியவில்லை. அதேபோன்று சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஆர்ஜிதம் செய்த சுமார் 850 ஏக்கர் நிலத்தை இதே எதிர்க்கட்சித் தலைவர் சிவா அவர்கள் கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் பிப்டிக் சேர்மனாக இருந்தபோது பிப்டிக் நிறுவனத்திற்கு மாற்றம் செய்தும் தொழில் புரிவோருக்கு குத்தகை விடமுடியவில்லை.
. மாநில நில உரிமை சம்பந்தமான சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசிடம் உள்ள அதிகாரம் நமக்கு வழங்க வேண்டும்.
கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் மாநில நில அதிகாரம், மாநில அரசிடம் இருந்ததா ?அப்படியே மாநில அரசிடம் இருந்திருந்தால் அந்த அதிகாரம் முதலமைச்சரிடம் இருந்ததா? ஏதோ முதலமைச்சரிடம் மாநில நில அதிகாரம் இருந்ததை பரித்து தற்போது துணை நிலை ஆளுநரிடம் வழங்குகிறார்கள் என் பொய் கூப்பாட்டை திமுகவின் எதிர்கட்சித் தலைவர் சிவா அவர்கள் போடுவது ஏன் ?
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரியாக புரிந்து கொள்ளாமல் பொய் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் மத்திய ,மாநில அரசுகள் மீது அவதூறு பரப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் புதுச்சேரி திமுகவின் முயற்சி தவறான ஒன்றாகும்.அரசு நில விவகாரம் என்பது நம் மாநில அரசின் அதிகாரத்தில் இதுவரை இல்லை. மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை நம் மாநில அரசுக்கு கேட்கிறோம். மத்திய அரசு மாநில அரசுக்கு டெல்லி போன்று நில அதிகாரம் வழங்கினால் அது மாநில நிர்வாகி துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் வழங்கப்படும்.
திமுக கட்சியின் மாநில தலைவர் அதுவும் எதிர் கட்சித் தலைவராக உள்ளவர் அரசியல் அறிவு கொஞ்சமும் இல்லாமல் அரைவேக்காட்டு தனமாக நடந்து கொள்வது நகைப்புக்கிடமாக உள்ளது. நமது மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற நிலையில்,மத்திய அரசிடம் உள்ள அதிகாரம் தரப்படுவதை எதிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.
பொய் வாக்குறுதி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் ஆட்சி வந்தது போன்று பொய் செய்திகளை பரப்பி புதுச்சேரியில் அரசியல் ஆதாயம் தேடும் புதுச்சேரி திமுக இதுபோன்ற தவறுகளை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எதற்கெடுத்தாலும் துணைநிலை ஆளுநர் மீது அவதூறு ஏற்படுத்துகின்ற விதத்தில் தொடர்ந்து வீண் புரளியை பரப்புவதை திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக